[9-9-10 அன்று சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் தியான ஆசிரமம் பினாங்கில் ஆற்றிய உரை]
நன்றி - எழுத்தாளர் ஜெயமோகன்அகதா கிறிஸ்டி எழுதிய துப்பறியும் நாடகமான எலிப்பொறி லண்டனில் பலவருடங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. சீட்டு விலை மிக அதிகம். இருந்தும் வெளிநாட்டினர்கூட வந்து பார்ப்பார்கள். பாரீஸில் இருந்து ஒருவர் வந்து அதைப்பார்ப்பதற்காக வாடகைக்காரில் சென்றார். சென்றிறங்கியதும் பயணக்கூலி சம்பந்தமாக சண்டை மூண்டது. பயணி சற்றும் விட்டுத்தரவில்லை. பின்னால் பிற வாடகை ஓட்டுநர்கள் வந்து ஒலியெழுப்ப ஆரம்பித்தனர்.
வேறு வழியில்லை. வாடகைக்காரர் காரை கிளப்பியபின் கூவினாராம் ‘கொலையைச்செய்தது அந்த மூன்றாவது வேலைக்காரன்!’ அவ்வளவுதான், நாடகம் அந்த பயணிக்கு ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு பெரியவர் கீதை உபந்நியாசம் செய்துகொண்டிருந்தார். கீதை சரணாகதியை உபதேசிக்கும் நூல் என்பது அவரது நம்பிக்கை. அது வைணவத்தின் அடிப்படை தரிசனமும்கூட. ‘சர்வ தர்மான் பரித்யக்ஞ மாமேகம் சரணம் விரஜ’ [அனைத்து தர்மங்களையும் கைவிடுக, என்னையே சரணடைக] என்ற வரியே கீதையின் மையம், உச்சம் என்று அவர் கண்ணீர் மல்கிச் சொன்னார்.
எனக்குத் தோன்றியது வேலைக்காரனின் ரகசியத்தை முன்னரே சொல்லிவிட்டு நாடகம் பார்ப்பது போல என்று. ஏனென்றால் அந்த வரிக்குச் சமானமான கருத்து கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்திலேயே வந்துவிடுகிறது. சரணாகதியை அப்போதே சொல்லிவிட்டார் கிருஷ்ணன். அதன்பின்னரும் 16 அத்தியாயங்களை எழுதி வைத்த அந்த ஆசிரியன் எத்தனை வடிவபோதமில்லாதவனாக இருக்கவேண்டும்!
உண்மையில் கீதை சரணாகதி நூலா? கீதையில் சரணாகதி சொல்லப்படுகிறதா என்றால் ஆம் என்றே சொல்வேன். அது கீதையின் செய்தி. அது கீதையின் ஆரம்பத்திலேயே வந்து விடுகிறது. ஆயினும் கீதை மேலே செல்கிறது. அப்படியானால் அது சரணாகதியைப்பற்றி மட்டுமே பேசக்கூடிய நூல் அல்ல. சரணாகதிக்கும் மேலாக பலவற்றை அது சொல்கிறது. சாங்கியயோகத்துக்குப் பின்னர்தான் கர்மயோகமும் ஞானயோகமும் எல்லாம் வருகின்றன. -->
அப்படியானால் மேற்கொண்டு சொல்லப்படும் விஷயங்கள் சரணாகதிக்கு வலுச்சேர்க்கும் விதமாகச் சொல்லப்படுகின்றனவா? சரணாகதியை விளக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ அவை சொல்லப்படுகின்றனவா? மேற்கொண்டு சொல்லப்படுவனவற்றுக்கு சரணாகதி முதல் படியோ முன்நிபந்தனையோ ஆக உள்ளதா?