நான் ஐயாவின் இதயத்திற்கு அருகில் குடியிருப்பதால் அவரை நன்கு அறிவேன் , அவர் தீர்ப்பு எழுதிவிட்டு மீண்டும் என்னை சட்டை பையில் வைக்கும் போது அவர் இதய துடிப்பு எனக்கு புரியும்.
கொஞ்சம் பொறுங்கள்.. எனக்குள் இருப்பது அரசாங்கம் வழங்கிய 'எழுது பொருள் திரவம் ' ( மை ) . அதை நீக்கிவிட்டு பேசுகிறேன். எனக்குள் அந்த அரசாங்க திரவம் இருந்தால் நானும் ஐயா மாதிரியே எழுதுவேன். ஆதலால், அதை உதறிவிட்டு, எப்பொழுதும் எழுதும் நான் இப்பொழுது மட்டும் பேசுகிறேன்.
'பிறழ் மனம்' ( புத்தி பேதலித்து இருப்பது ) கொண்டவர்கள் தவறு செய்தால் சட்டத்தால் தண்டிக்க இயலாது என்று ஐயா கூறக் கேட்டிருக்கிறேன்.
அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன். சமுதாய நிகழ்வுகளை புரிய இயலாத நிலையில் இருப்பதால் அதை 'பிறழ் மனம்' என குறிப்பிடப்படுகிறது.
'நிகழ் மனம்' ( நிகழ்வுகளை கண்டறியும் புத்தி ) நிலையில் ஒருவன் சட்டத்திற்கு புறம்பாக செயல் செய்தால் அவன் தண்டிக்கப்படலாம். மது அருந்துவதால் ஒருவர் தற்காலிக பிறழ் மன நிலைக்கு செல்வதாக பௌதீக அறிவியல் கூறுகிறது.
மது அருந்தியதால் , முறையற்ற காம இச்சையுற்று ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக கொடூரமாக துன்புறுத்தி - அந்த பெண்ணின் மரணத்திற்கு காரணமாயிருந்திருக்கிறார்கள். மது அருந்தியதால் மட்டுமல்ல - தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதால் அவர்கள் பெரும்பான்மையான நேரங்களில் பிறழ் மன நிலையில்தான் இருந்திருக்க வேண்டும்.
மேற்கூறிய காரணத்தினால் மட்டும் ஒருவரது குற்றத்தை நியாயப்படுத்திவிட முடியாது. நான் சொல்ல வருவது , இந்த குற்ற செயலில் ஈடுபட்ட மற்றவர்களை நாம் அடையாளம் காண மறந்து விடக்கூடாது என்பதுதான்.
குற்றவாளி 1. டெல்லி பெருநகர போக்குவரத்து காவல்துறை
காரணம் : ஒரு நாட்டின் பெரு நகரத்தில், மது அருந்தி விட்டு கன ரக வாகனத்தை நகர எல்லைக்குள் மிக சாதாரணமாக இயக்க முடியும் என்பது நகர போக்குவரத்து காவல் துறையின் அவமானம் பொருந்திய அவலம். அவர்கள் கடைமையை என்றேனும் ஒரு நாள் சரியாக செய்திருந்தால் கூட இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
மது அருந்தியவர்களை சுதந்திரமாக குற்றம் செய்ய அனுமதிக்கும் சூழல் தந்தது யார் குற்றம் ?
குற்றவாளி 2. டெல்லி முதல்வர்
காரணம் : மது ஒரு மனிதனின் நிகழ் மன நிலையை அழித்து , பிறழ் கொள்ள செய்து விடும் தன்மை கொண்டது என அறிந்திருந்தும் , அதை தாராளமாகவும் - ஒரு சாமன்யன் வாங்கும் சக்திக்கு ஏற்றாற்போல விலையில் விற்பனை செய்தது ஒரு மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அவமானமில்லையா ?
மதுவை தராளமாக விற்றது யார் குற்றம் ?
ஒருவனுடைய புத்தி பிறழ் மன நிலைக்கு தயாராகுவதற்கு அரசாங்கத்தின் சாராய விற்பனை கொள்கையும் - அந்த பிறழ் மனம் தொடர்ந்து செயல்படுவதற்கு விழிப்புணர்வும் - கடமையுணர்ச்சியுமற்ற காவல்துறையும் காரணமல்லவா ?
மதி நுட்பமற்ற தலைவர்களும் - கடமை உணர்வற்ற அதிகாரிகளும் வைத்து கொண்டு இன்னும் எத்தனை பேரை தூக்கில் போடச் சொல்லி ஆணை பிறப்பிக்கப்போகிறார்கள் இந்த நீதிமான்கள் ?
மது இரத்தத்தில் கலந்து மூளைக்கு சென்றுவிட்டால் , உடல் இயந்திரமாகவும் - மூளை மோசமன எஜமானனாகவும் மாறிவிடும்.
இயக்கியவனை விட்டுவிட்டு - இயந்திரத்தை தண்டிப்பது எப்படி நீதியாகும் ? ஒரு பேனாவாகிய எனக்கு புரியவில்லை ! உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள் !
EDITOR - tamilagamtimes@post.com
super...
ReplyDelete