Monday, February 10, 2014

பணவீக்கத்தைத் தாண்டி லாபம் தரும் முதலீடுகள்!

பணவீக்கம் பூதாகரமாக உயர்ந்து நின்று அச்சுறுத்தும் இன்றைய சூழலில் நாம் செய்யும் முதலீடுகளிலிருந்து கிடைக்கும் பலன் பணவீக்கத்தை மிஞ்சியிருப்பது அவசியமாகிறது.
இன்று பொதுமக்களுக்கான பணவீக்கத்தைக் குறிக்கும் சிபிஐ (CPI) எனப்படும் கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ்  ஏறக்குறைய 10% என்ற அளவில் உள்ளது. இது பல சமயங்களில் வங்கி வைப்பு நிதியி லிருந்து (Fixed deposit) கிடைக்கும் வருவாய் பணவீக்கத்துக்கு ஈடாகாமல் போய்விடுவதால் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்கள் கவரப்படுகிறார்கள்.
பணவீக்கத்தைத் தாண்டிப் பலன் தரும் முதலீடுகளில் மூன்று வகையான முதலீடுகளை நாம் விளக்கமாகப் பார்ப்போம். அதில் முதலாவது, தங்கம் சார்ந்த முதலீடு. இரண்டாவது, பங்குச் சந்தை முதலீடு. மூன்றாவது, இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் பணவீக்கம் சார்ந்த பாண்டு (Inflation Indexed Bonds).
பணவீக்கத்தைத் தாண்டி  பலன்தரும் நோக்கில் செய்யப்படும் இந்த மூன்று முதலீட்டு வாய்ப்புகளில் ஒருவருக்கு ஏற்றது எது? என்கிற கேள்விக்கு இனி பதில் காண்போம்.  
தங்கத்தில் முதலீடு!
தங்கம் என்பது எப்போதுமே நம்மவர்களுக்குப் பிடித்த முதலீடு. தங்கத்தின் விலை சில குறிப்பிட்ட கால அளவில் அபரிமிதமான ஏற்றம் காணும் என்றாலும், விலை வீழ்ச்சி அபரிமிதமாக இருக்க வாய்ப்பு குறைவே.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 1950-ல் ரூ.10-ஆகவும், 1970-ல் ரூ.18, 1980-ல் ரூ.133, 1990-ல் ரூ.320,  2000-ல் ரூ.440, 2005-ல் ரூ.700, 2010-ல் ரூ.1850-ஆகவும் உயர்ந்து, இன்று ஒரு  கிராமுக்கு சுமார் ரூ.3,000 என்ற அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இவ்வாறு நீண்டகால அடிப்படையில் தங்கம் பணவீக்கத்தை மிஞ்சிய பலன் தரும் அளவுக்கு விலையேற்றம் கண்டு பணவீக்கத்திலிருந்து முதலீடுகளைக் காத்து வந்திருக்கிறது.
தங்கத்தை நகைகளாக வாங்க விருப்பமில்லை எனில், தங்கம் சார்ந்த ஃபண்டு (Exchange Traded Fund - ETF) மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் பிற மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
பங்குச் சந்தை முதலீடு!
பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் தரும் அபரிமிதமான பலனைப் பெற நினைக்கும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ஏற்றஇறக்கங்களைக் கண்டு அஞ்சி நிற்பதும் உண்டு. ஆனால், அச்சம்கொள்ளும் அளவுக்குப் பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடுகள் அபாயகரமானவையா என்றால் நிச்சயமாக இல்லை. தரமான பங்கு களையோ, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களையோ சரியாக ஆராய்ந்துத் தேர்ந்தெடுத்து நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்துவிட்டால் வேறு எந்த முதலீட்டு முறையும் பெற்று தரமுடியாத லாபத்தை இவை கொடுக்கும்.
1990-ல் 1000 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் (Sensex) 2000-ல் 5000 புள்ளிகளைக் கடந்து, 2006-ல் 10000 புள்ளிகளைத் தொட்டது. 2010-ல் 20000- ஆகி இன்று 20700 என்ற நிலையில் வளர்ந்திருக்கிறது. எனவே, 1990-ல் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டில் அங்கம் வகித்த பங்குகளில் மட்டும் பிரித்து முதலீடு செய்திருந்தால் இன்று அது ஏறக்குறைய இருபது மடங்காகப் பெருகியிருக்கும். இதே காலகட்டத்தில் 100 மடங்கு அல்லது அதற்குமேலான பெருக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்த பங்குகளும் உண்டு.
பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான அனுபவமும் நேரமும் இல்லாத முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறலாம்.
பணவீக்கம் சார்ந்த கடன் பத்திரங்கள்! (IIB)
பணவீக்கத்தைத் தாண்டி பலன் தரும் முதலீடுகளில் புதுவரவான பணவீக்கம் சார்ந்த கடன் பத்திரங்கள் (Inflation indexed bonds) இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. டிசம்பர் 2013-ன் பின்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் 10 வருட காலத்துக்கானது. மொத்த வட்டியும் சேர்த்து 10 வருடம் முடியும்போதுதான் தரப்படும். இடையில் 10 வருட காலம் முடியும்முன்பு, முதலீடு செய்த பணத்தை வெளியே எடுக்க விரும்பினால் முதியோராக (65 வயதுக்குமேல்) இருந்தால் ஒரு வருடம் முடிவடைந்த பின்னரும், மற்றவர்கள் 3 வருடம் முடிவடைந்த பின்னரும் மட்டுமே வெளியே எடுக்க முடியும்.
அவ்வாறு எடுக்கும்போது, அவர்கள் முதலீட்டிலிருந்து வெளிவரும் கடைசிக் காலாண்டுக்கான வட்டியில் 50% பிடிக்கப்பெற்று எஞ்சிய தொகை மட்டுமே திரும்பத் தரப்படும்.
இந்தத் திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சம் ரூ5,000-மும்  அதிகபட்சம் ரூ.5 லட்சமும்  முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்களின் மத்தியில் போதிய வரவேற்பு பெறாததால், 2014, மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாதக, பாதகங்கள்!
இந்த முதலீட்டு வாய்ப்புகளின் சாதக, பாதகங்கள் இனி...
தங்கத்தில் செய்யும் முதலீடு மிக நீண்டகால அடிப்படையில் நல்ல பலனை அளிக்கும் என்றாலும், சில சமயங்களில் போதிய லாபத்தை அளிப்பதில்லை.
அவ்வப்போது தங்கத்தின் விலை நல்ல ஏற்றத்தைத் தரும் என்றாலும், இது அடிக்கடி நிகழ்வதில்லை. ஆபரணமாக அல்லது காசு மற்றும் பார் வடிவில் வைத்தி ருக்கும் தங்கம் பாதுகாப்பில்லாதது.
ஐந்து வருடத்துக்கு மிகுதியான கால அளவில் தங்கத்தில் செய்யும் முதலீடு, பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடுகள் அளவுக்குப் பயன் தராது என்பது வரலாற்று உண்மை. அதுபோல, பங்குச் சந்தை ஏற்றத்தின் பாதையில் இருக்கும்போது தங்கத்தின் விலை இறங்குமுகமாகவோ, மந்தமாகவோ இருக்கும்.
பணவீக்க பாண்டை (IIB) பொறுத்தவரை, எந்தக் காலகட்டத் திலும் சிபிஐ-யைவிட 1.5% வட்டி அதிகமாகக் கிடைக்கும் என்றாலும், சிபிஐ 8 சதவிகிதத்துக்குக் கீழே குறையும் காலங்களில் வங்கி டெபாசிட்கள் ஐஐபியைவிட அதிகப் பலன் தர வாய்ப்புள்ளது. சிபிஐ 9 சதவிகிதத்துக்குமேல் இருக்கும் காலங் களில் மட்டுமே ஐஐபியின் பலன் கவர்ச்சிகரமாக இருக்குமே தவிர, மற்றச் சமயங்களின் அதன் பலன் திருப்திகரமாக இருக்காது.
பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் ஐந்து வருடத்துக்குமேலான கால அளவில், மேற்கண்ட முதலீட்டு வாய்ப்புகள் அனைத்தையும்விட அதிகமான பலனை அளிக்கும். ஐந்து வருடத்துக்கு அதிகமான கால அளவில் தங்கமும், ஐஐபியும் ஏறக்குறைய 10% பலன் தரலாம்.
ஆனால், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் இதே காலஅளவில் 12% முதல் 20% வரை (ஒரு வருட அடிப்படையில்) வளர்ச்சி காணும் தன்மை கொண்டவை.
அதேசமயம், குறுகியகால அடிப்படையில் ஏதாவது அவசரத் தேவை ஏற்பட்டால் தங்கத்தை அதிக நஷ்டம் இல்லாமல் விற்றுவிட முடியும். ஆனால், பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடுகளைக் குறுகியகாலத்தில் விற்கும்போது பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்திருந்தால் அதற்கேற்பதான் வருமானம் கிடைக்கும்.
தங்கத்தை எளிதாக அடகு வைத்து கடன் பெற முடியும். ஐஐபியையும் அடகு வைத்து கடன் பெறமுடியும் என்றாலும், கடன் பெறும் வசதி தங்கத்தில் உள்ள அளவுக்கு எளிதல்ல. பங்குகளையும் தங்கம் அளவுக்கு எளிதாக அடகு வைத்து கடன் பெற முடியாது. பங்குகளின் விலையில் பாதி அளவுக்கே கடன் கிடைக்கும்.
வருமான வரி அடிப்படையில்  அதிகபட்ச வரிச் சலுகையைப் பெறுவது பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடுகள்தான். பங்குகள் அல்லது பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடுகள் ஒரு வருடத்துக்குமேல் இருந்தால், கிடைக்கும் லாபத்துக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை.
முதன்முதலாகப் பங்குகளில் செய்யும் ரூ.50,000 வரையிலான முதலீட்டுக்கு 50% 80சிசிஜி-ன்படி, வரிவிலக்கு உண்டு.
பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டமான இஎல்எஸ்எஸ் (ELSS) திட்டத்தில் ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து 80சி-ன்படி வரிவிலக்குப் பெறலாம்.
தங்கத்தில் முதலீடு செய்யும்போது மூன்று வருடத்துக்குமுன்பு விற்கும் போது, ஒருவரின் அடிப்படை வருமான அளவுக்கேற்ப கிடைக்கும் லாபத்தில் (10%, 20%, 30% வரியாகச் செலுத்த வேண்டும்.
மூன்று வருடத்துக்குப் பிறகு விற்றால் பணவீக்க விகிதச் சரிக்கட்டல் (indexation) செய்தபின் லாபத்தில் 20%, இல்லையேல் 10% வரியாகச் செலுத்த வேண்டும்.
தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து, ஓர் ஆண்டுக்குமுன் விற்றால், ஆண்டு வருவாய்க்கு உள்ள வரி வரம்பின்படி கிடைக்கும் லாபத்துக்கு வரிச் செலுத்த வேண்டும். ஓர் ஆண்டுக்குப்பின் விற்றால் பணவீக்க விகிதச் சரிக்கட்டல் (indexation) செய்தபின் லாபத்தில் 20% இல்லையேல் 10% வரியாகச் செலுத்த வேண்டும்.
ஐஐபி மூலம் கிடைக்கும் பலன் அப்படியே ஒருவரது ஆண்டு வருமானத்தில் சேர்க்கப்பட்டு அதற்கேற்றவாறு வருமான வரியாகக் கட்ட வேண்டும்.''
இனிமேல் நாம் பணவீக்கத்தைத் தாண்டி சம்பாதிப்போம்!

No comments:

Post a Comment