Friday, March 4, 2011

ஞான நதிக்கரையில்..... ( அருட்செல்வரின் ஞான பகிர்வுகள்)

                              சகல உயிர்களுக்கும் - பயன்பாடு கொண்ட ஜீவ நதிக்கரையில் அமர்ந்து உரையாடிய அனுபவம் நமக்கு நம் மனதில் தோன்றிய இடம் அருட்செல்வர் டாக்டர் பத்மபூஷண் ஐயா மகாலிங்கம் அவர்களோடு கலந்துரையாடல் செய்தபோது ஏற்பட்டது. நம் கலந்துரையாடல் ஆரம்பமாகும் முன்பே ஐயாவின் உதவியாளர்கள் கொங்கு நாட்டுக்கே உரிய பண்போடு நம்மை உபசரித்து அணுகிய முறையிலேயே ஐயாவின் அலுவலகம் அருட்செவ்வத்தால் நிறைந்திருப்பது நம்மால் உணர முடிந்தது.

கலந்துரையாடலுக்காக நமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வந்து, நேர பயன்பாட்டின் முக்கிய அம்சமான நேரந்தவறாமையை கடைபிடித்தது முதல் - அரசியல் களம் மூலம் மக்களுக்காற்றிய தொண்டு - நடைமுறை அரசியல் அமைப்பின் சமகால ஆய்வு - வாழ்க்கை பயன்பாட்டிற்கான தொழிற்கல்வி முறை சிந்தனை - தெய்வ வழிபாடும் / தனிமனித சக்தியின் சமூக உபயோகமும் - அமானுஷ்யம் பற்றிய ஐயாவின் அறிவியல் பார்வை - சமகால அரசியல் நிகழ்வு பற்றிய ஆய்வு - தற்சமயம் ஆய்வில் இருக்கும் ஆதி கால கிரந்த எழத்து வடிவங்களின் ஆய்வு என ஐயாவின் பரந்த - ஆழ்ந்த ஞான நதி ஓட்டம் நமக்கு புரிந்தது.

கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரையாடலாக அல்லாமல் ஐயாவின் ஞான பகிர்வு நிகழ்ச்சியாகவே அது அமைந்தது. அப்படியே இணையத்தில் வெளியாகும்.

இதோ பகிர்வு ஆரம்பம்...

ஐயாவின் பௌதீக உடலின் வயது பற்றி குறிப்பிடும் முன் - முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஐயாவை சந்தித்தப்போது ஐயாவிடம் வினவியது " தங்களின் சமீபத்திய கனவு என்ன ? " ஐயாவின் பதில் " கிரந்த எழுத்து ஆராய்ச்சி " . இளைஞர்களை கனவு காண சொல்லும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், கனவுகளை நடைமுறையாக்கும் திறன் கொண்ட ஐயாவிடம் இப்படி கேட்டதால் ஐயாவின் உடலின் வயது பற்றி அறியும் எண்ணம் நம்முள் எழவில்லை. ஐயாவின் ஆழ்ந்த ஞான அளவின் சமகால பயன்பாடு மட்டுமே நம் நோக்கம்.

இந்தியாவின் அனைத்து மொழி எழுத்துக்களின் மூல வடிவமான கிரந்த எழுத்துகள் குறித்த தங்கள் ஆய்வுகள் ...

தமிழ் எழுத்துக்கள் - கிரந்த எழுத்துக்கள் ஆய்வு

1 அ ) தமிழ் மொழி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களின் எழுத்துக்களை உள்ளடக்கியது.

ஆ ) அருணகிரிநாதர் அகரம் முதலாய் 51 அட்சரங்களைக் கொண்டது தமிழ் மொழி எனக்கூறுகிறார்.

இ ) திருமூலர் தமிழ் மொழி 51 எழுத்துக்களைக் கொண்டது எனக் கூறுகிறார்.

ஈ ) தமிழ் நாட்டுக்கே உரிய ஆகம சாஸ்திரங்களும், எழுத்துக்கள் 51 கொண்டவையாக இருக்கின்றன. அதேப்போல தமிழ் நாட்டுக்கே உரிய ஸ்தபதிகளின் சிற்ப சாஸ்திரங்களும், கல்வெட்டுகளும் 51 எழுத்துக்களைக் கொண்டவை.

உ ) இந்த நிலையில் இன்றுள்ள தமிழ் எழுத்துக்களுடன் கிரந்த எழுத்துக்களை சேர்த்துக்கொண்டால் தமிழ் எழ்த்துக்கள் 51 என்று புலனாகும்.

ஊ ) கிரந்த எழுத்துக்களை நீக்கி விட்டால் நமது பாரம்பரிய சொத்துக்களான கல்வெட்டு சாஸ்திரங்களையும் ஆகம சாஸ்திரங்களையும், மந்திர சாஸ்திரங்களையும் இழந்தவர்களாவோம்.

எ ) பஞ்ச திராவிடம் என வழங்கப்படும் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மராட்டி, குஜராத்தி , ஆகிய மொழிகளில், தமிழ் தவிர ஏனைய மொழிகளில் கிரந்த எழுத்துக்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் மொழி மட்டும் கிரந்த எழுத்துக்களை ஒதுக்கிவிட்டதாக உணருகிறேன்.

ஏ ) கிறிஸ்து அவதாரத்திற்கு முந்திய 5 ஆவது நூற்றாண்டு ( 5th century BC ) க்குப்பின் சமஸ்கிருதம் நாகரி வடிவத்தை ஏறுக்கொண்டபின் வட இந்தியாவின் ஹிந்தி உட்பட பல மொழிகள் கிரந்த எழுத்துக்களை விட்டுவிட்டன.

ஐ ) சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், கல்வெட்டு ஆகிய பாரம்பரிய சொத்துக்களுக்கு ஆதாரமாகவுள்ள கிரந்த எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களே என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முதல் சங்ககால எழுத்துக்கள் என்ன என்ற ஆய்வு மூலம் இதற்கு விடை கிடைக்கும்.

2. அரசியல் பிரவேசம்

அ ) பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று 1952 முதல் 1967 வரை 15 ஆண்டுகள் சட்டமன்றஉறுப்பினராகப் பணியாற்றுள்ளேன். அப்பொழுது கேரளம், கோவை மற்றும் பொள்ளாச்சி மலைத் தோட்டத் தொழிலாளர்கள் ( பெரும்பாலும் பொதுவுடைமைக் கட்சி ஆதிக்கத்தில் இருந்தாலும் ) என்னை ஆதரித்து சுமார் 35000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.

ஆ ) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ. 30 இலட்சம் செலவிடப்பட்ட நிலையில் பொள்ளாச்சி தாலுக்கா வளர்ச்சி திட்டங்களுக்காக ( LOCAL DEVELOPMENT WORK ) ரூ. 35 இலட்ச செலவில்

1. சாலை அபிவிருத்தி

2. கல்வி நிலையங்கள்

3. சுகாதார வளர்ச்சி

4. கிராம வளர்ச்சி

போன்ற வளர்ச்சிப் பணிகளை செயலாக்கியுள்ளேன். அவற்றின் இன்றைய மதிப்பு சுமார் ரூ. 70 கோடிகளுக்கு சமமாகும்.

இ ) மேலும் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது ...

1. பாசன வசதியற்ற சுமார் 2.5 இலட்சம் ஏக்கருக்கு நீர்ப் பாசன வசதி ஏற்படுத்தி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்து உள்ளேன்.

2. கூட்டுறவு தொழிற்கூடங்களை ஏற்படுத்தி தொழில் முனைவோரை ஊக்குவித்துள்ளேன்.

3. கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ( கடன் வசதியுடன் ) வீடுகள் அமைக்கவும் வசதி ஏற்படுத்தியுள்ளேன்.

3. இன்றைய அரசியலமைப்பும் மாறிவரும் தேவைகளும்

அ ) 1947 - ல் சுதந்திரம் பெற்றுக் குடியரசானாலும் மக்களுக்குப் பூரண சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆ ) ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், கிராமச் சாலைகள் போன்ற துறைகளில் அன்று இருந்த மாவட்ட ஆட்சி ( DISTRICT BOARD ) மன்றத்திற்கு இருந்த அதிகாரம், இப்பொழுது முழுமையாக அவர்கள் பொறுப்பில் இல்லாமல், மாநில அரசும் சென்றுவிட்டது. இந்தப் பொறுப்புகளைப் பரவலாக்கி அந்தந்த மாவட்டம், ஒன்றியம், பஞ்சாயத்து போன்ற அமைப்புகளுக்கே வழங்கப்பட்டால், பணிகள் காலதாமதமின்றிஸ் செயலாக்கப் படும். குடியாட்சி முறை வலிவு பெறும் என்பதே எனது கருத்து.

இ ) அந்தந்த மாவட்ட ஆட்சியரும், சட்ட மன்ற உறுப்பினர்களும், ஒன்றிய பஞ்சாயத்துப் பிரதிநிதிகளும், அந்தந்தப் பகுதிகளுக்குத் தேவையான வளர்ச்சி பணிகளைக் கண்டறிந்து அரசு இசைவு பெற்று விரைவாகச் செயலாக்கப் பாடுபடுவர்.

ஈ ) அமைச்சர்களும், அரசுச் செயலர்களும் மாவட்டங்களுக்கும், ஒன்றியங்களுக்கும் அடிக்கடிப் பயணம் செய்வதைக் குறைத்துக் கொண்டு வளர்ச்சித் திட்டங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயலாக்க அவர்களுடைய நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மாவட்ட அலுவலர்கள், வளர்ச்சிப் பணிகளின் செயலாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். மாவட்ட, ஒன்றிய அளவிலான மக்கள் பிரதிநிதிகள் உத்வேகத்துடன் செயல்படுவார்கள் என்பது எனது நம்பிக்கை.

இளைய தலைமுறையினருக்கான ஊக்க சிந்தனைகள் - காலத்திற்கேற்ப கல்வி முறை என ஐயாவின் பேட்டி தொடரும்...

மகிழ்ச்சியான செய்தி ... ஐயா அவர்கள் வாசகர்களின் உளப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்... அடுத்த வாரம். 

No comments:

Post a Comment