Monday, February 10, 2014

மகாபாரதம்

மகாபாரதம் மகத்தான இதிகாசம். அது ஹோமர் எழுதிய இலியட், ஒடிஸி என்கிற இரண்டு காவியங்களைவிட நீளமானது.  ஏராளமான கிளைக் கதைகள் கொண்டது. அதை இதிகாசமாக மட்டும் பார்க்காமல், மேலாண்மைப் பாடமாகவும் வாசிக்க முடியும். மாற்றி யோசிப்பதற்கான பல உத்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.  
'கத்தியின்றி ரத்தமின்றி ஒருவரை வெற்றி பெறமுடியும்’ என்பதை முதலில் உரைத்தது மகாபாரதம்தான். அதற்குப் பயன்பட்டது  சகுனியின் பகடை.  
தர்மரை சூதாட்டத்தின் மூலம் வெல்லலாம் என்பதைச் சகுனி அறிந்த சந்தர்ப்பம் சுவையானது.  
ஒருவனுக்கு யாகம் செய்ய நூறு வெண் பசுக்கள் தேவைப்பட்டன.  பால் வெள்ளை நிறத்தில் எந்தப் புள்ளியும் இல்லாமல் பசுக்கள் இருந்தால்தான், யாகம் நிறைவேறும். அப்படியான பசுக்களைத் தேடி அலைந்த அவன் கண்களில், இந்திரப்ரஸ்தத்தின் வாசலில் இருந்த 21 பசுக்கள் பட்டன.  ஒரே இனத்தில் பிறந்த மரபு வெண் பசுக்கள் அவை.  

ஆனால், அவற்றை யாசகம் கொடுக்க யுதிஷ்டிரனுக்கு மனமில்லை.  
வந்தவன் சொன்னான்... ''நான் உன் பசுக்களை வெல்லப் போவது அஸ்திரத்தால் அல்ல; வாக்கினால்!''
''எனக்கு வாதம் செய்வதில் விருப்பம் இல்லை.'
''நாம் பகடையால் விளையாட முடியும்.'
''உன்னிடம் பணயம் என்ன இருக்கிறது?'
''யாசகமாக நீங்கள் ஒரே ஒரு மலரைக் கொடுங்கள். அதையே பணயம் வைத்து நான் விளையாடுகிறேன்.'
தர்மர் அவனிடம் மஞ்சள் நிற மலரைக் கொடுத்தார்.  இருவரும் பகடை விளையாடினார்கள். ஏழு வெண் பசுக்கள் தர்மன் தரப்பில் பணயமாக வைக்கப்பட்டன. தர்மர் தோற்றார். மூன்று முறையும் தோற்றார்.  21 வெண் பசுக்களும் வந்தவனுக்குச் சொந்தமாயின. அதற்குப் பிறகு, இப்படியே பல்வேறு இடங்களில் அவன் 87 பசுக்களை திரட்டிவிட்டான். இன்னும் 13 தேவையாக இருந்தன.  
துரியோதனனின் கொட்டிலில், 13 தூய வெண் பசுக்கள் இருப்பதை அவன் அறிந்தான். எனவே, துரியோதனனின் கவனத்தை ஈர்க்க விழைந் தான். அவன் பார்வையில் படும் வண்ணம், கறுப்பு நிறக் குதிரை ஒன்றில், நகர வீதிகளில் வலம் வந்தான். துரியோதனனுக்குக் குதிரைகள் என்றால், அபார மோகம். அந்தக் கறுப்புக் குதிரை அற்புதமாக இருக்கிற செய்தி, ஒற்றர்கள் மூலம் அவனுக்கு எட்டியது. துரியோதனனுக்கு அந்த அழகிய குதிரையைத் தன்வசமாக்கிக்கொள்ள ஆசை பிறந்தது. யாசகனை அழைத்துவரச் சொன்னான். யாசகனும் வந்தான். துரியோதனனின் விருப்பத்தை அறிந்து, சூதாட்டத்தின் மூலம் குதிரையை அவன் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னான் யாசகன். சூது தொடங்கியது.
யாசகனின் பகடைகள் உருள ஆரம்பித்தன. குதிரையின் வாலிலிருந்து ரோமம் ஒன்றைக் கிள்ளிப் பணயமாக வைத்தான் அவன். அதற்குச் சமமாக துரியோதனன் ஏழு குதிரைகளை வைத்தான். ஆனால் யாசகனோ, தன் குதிரைக்குச் சமமானவை 13 வெண் பசுக்கள் என்றான்.  துரியோதனனும் ஆசையின் பிடியில் தலையசைத்தான். கைநொடிக்கும் நேரத்தில் யாசகன் வென்றான். குதிரையை இழுத்துக்கொண்டு, பசுக்களையும் ஓட்டிக்கொண்டு அரண்மனையைவிட்டு வெளியேறினான்.
அந்த யாசகனின் மார்பைப் பிளக்கவேண்டும் எனும்படியாக உக்கிரம் கொண்டான் துரியோதனன். ஆறுதல் தேடி சகுனியிடம் சென்றான்.
துரியோதனனின் உடலசைவு மொழிகளைக்கூடத் துல்லியமாக அறிந்தவன் சகுனி. நடந்தவற்றைக் கேட்டறிந்தான். ''மருமகனே! நீ நினைப்பதுபோல உன்னோடு பகடை ஆடியவன் சாதாரணமானவன் அல்ல. உன்னைப் போரில் சிக்கவைத்து வெற்றி பெற்றிருக்கிறான். ஆயினும், கவலைப்படாதே! உனக்குப் பக்கபலமாக நான் இருக்கிறேன்' என்று துரியோதனனை அமைதிப்படுத்தினான்.  
இருட்டுவதற்கு முன்பு அந்த யாசகனை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வரச்செய்தான். வந்தவனை சகுனி வெகுவாகப் பாராட்டினான்.
''நீ எத்தனை பசுக்களை வென்றிருக்கிறாய்?'
''பதின்மூன்று!'
''ஆனால், நீ அழைத்துச் சென்றது 14 என்று துரியோதனன் சொல்லு கிறான். உன்னிடம் அதிகமாக உள்ள ஒரு வெண் பசுவை திருப்பித் தந்துவிடு!'
''இல்லை. நான் 13 பசுக்களைத்தான் சூதில் வென்றேன்!'
சகுனி துரியோதனனிடம் கேட்டான்... ''நிஜமா?'
துரியோதனன் பதில் பேசவில்லை.
''நீ ஓட்டிச் சென்ற ஒரு பசுவின் கர்ப்பத்தில் வளரும் கன்றைக் கணக்கில் சேர்க்க மறந்துவிட்டாய். அது எங்களுக்கு உரியது. அதைத் தந்துவிட்டு, பசுவை அழைத்துப் போ!' என்றான் சகுனி.
யாசகன் தடுமாறினான். ''கர்ப்பத்தில் உள்ள பசுங்கன்றை எப்படித் தருவது?'
''காத்திரு! அது கன்று ஈனும் வரை காத்திரு. அல்லது, உனக்குத் திறமை இருந்தால், அதையும் சூதில் வென்றுவிடு!''
சகுனியுடன் அந்த யாசகன் சூதாடுவதாக ஒப்புக்கொண்டான். பகடை உருண்டது. அவன் கேட்ட எண்ணில் பகடை விழுந்தது. ஒரு பசுவைத் தோற்றான் யாசகன். இப்படியே  நூறு வெண் பசுக்களையும், தனது குதிரையையும்கூட அவன் சகுனியிடம் இழந்துவிட்டான்.  
அவனிடம் சகுனி, ''நீ யாரிடம் அதிகப் பசுக் களைச் சூதாடி வென்றாய்?' என்று கேட்டான்.
''தர்மரிடம்.'
''எத்தனை?'
''இருபத்தொன்று.'
சகுனிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நூறு பசுக்களையும் அவனுக்கு யாசகம் தந்து அனுப்பி வைத்தான். துரியோதனன் புரியாமல் விழித்தான்.
சகுனி சொன்னான்... ''ஒரு யாசகனால் தர்மனோடு சூதாடி அரிய 21 வெண் பசுக்களை வெல்ல முடிந்திருக்கிறது. அவன் நமக்கு வழிகாட்டியிருக்கிறான். தர்மனைச் சூதாட விருந்துக்கு அழைக்கவேண்டும்.  நீயல்ல;  உன் தந்தை. நாம் எந்தச் சிரமமும் இல்லாமல், அவர் கள் நாட்டையே வென்றுவிடலாம். நீ பட்ட அவமானங்களுக்குப் பழி தீர்த்துவிடலாம்.''
பாண்டவர்களைப் போரில் வெல்வது கடினம், சூதில் வெல்வது எளிது என்பதை சகுனி உணர்ந்தது அப்போதுதான்.
எவ்வளவு உயர்ந்த நெறிபடைத்தவனாக இருந்தாலும், ஒரு சின்ன பலவீனம் ஒருவனை வீழ்த்திவிடும் என்பதற்கு தர்மன் சாட்சி!  
பாரிஜாத மலர் பற்றி ஒரு கதை உண்டு.
ஒரு நாள், நாரதர் துவாரகைக்கு வந்தார். அவர் கையில் ஒரு பாரிஜாத மலர் இருந்தது. கிருஷ்ணரிடம் அவர் அதைக் கொடுத்து, ''இந்த மலர் மிகவும் அழகாக இருக்கிறது. மலர்களை மிகவும் விரும்புகிற ருக்மிணிக்கு தாங்கள் இதைத் தரலாம், அல்லவா?'' என்று கேட்டார்.
கிருஷ்ணர் ரொம்பவும் சந்தோஷமாக அந்த மலரை எடுத்துக்கொண்டு ருக்மிணியின் மாளிகைக்குப் போனார். அதற்குள் குறும்புக்கார நாரதர், கிருஷ்ணரின் மற்றொரு மனைவியான சத்யபாமாவின் இல்லத்துக்கு ஓடினார். முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டார்.
''முனிவரே! ஏன் வேதனையோடு இருக்கிறீர்கள்?' என்று கேட்டாள் பாமா.
''இந்திரன் தோட்டத்திலிருந்து ஒரு பாரிஜாத மலரை கிருஷ்ணனுக்காகக் கொண்டு வந்தேன். 'உங்களுக்குப் பிரியமான மனைவிக்கு இதைத் தாருங்கள், பிரபுவே!’ என்று சொன்னேன்.  அதை அவர் உனக்குத் தருவார் என்று நினைத்தே அப்படிச் சொன்னேன். ஆனால், அவரோ அதை ருக்மிணியிடம் கொண்டு போய்க் கொடுத்துவிட்டார்!'' என்று கோள் மூட்டினார் நாரதர்.  
ஆத்திரம் அடைந்தாள் சத்யபாமா. ''அந்த மலரை நான் கைப்பற்றாமல் விடமாட்டேன்'' என்றாள்.  ''அமைதியாக இரு! ஒற்றை மலரை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? உன் மீது கிருஷ்ணருக்கு உண்மையான பிரியம் இருந்தால், தேவலோகத்திலிருந்து அந்த மரத்தையே அல்லவா உன்னிடம் கொண்டு வந்து தரவேண்டும்?'' என்றார் நாரதர்.
சத்யபாமா கிருஷ்ணரிடம் சென்று, அவரை உலுக்கியெடுத்தாள்.  ''உங்களுக்கு என்னைவிட ருக்மிணியைத்தானே அதிகம் பிடித்திருக்கிறது?'' என்று கோபப்பட்டாள். கிருஷ்ணரால் அவளைச் சமாதானம் செய்ய முடியவில்லை.
''உங்கள் சமாதானம் எதுவும் எனக்கு வேண்டாம். என் மீது உங்களுக்குப் பிரியம் இருந்தால், அந்தப் பாரிஜாத மரத்தையே கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் பட்டினி கிடப்பேன்'' என்றாள்.  
கிருஷ்ணர் அமராவதிக்குப் பறந்தார். இரவு நேரத்தில் திருட்டுத்தனமாகத் தோட்டத்தில் நுழையும்போது, காவலர்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்கள்.  தேவேந்திரன் முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.  
இந்திரன் அவரைப் பார்த்ததும் ஆச்சரியப் பட்டான்.  நடந்ததைச் சொன்னார் கிருஷ்ணர். இந்திரன், ''சரிதான்... மனைவிகள் சமாசாரமா?' என்று சொல்லிச் சிரித்துவிட்டு, மரத்தைக்  கொடுக்க ஆணையிட்டான்.
'இந்த மரத்தைக் கொண்டுபோய் பாமா வுக்குக் கொடுத்தால், ருக்மிணிக்கு கோபம் வரும். இன்னொரு மரத்துக்கு நான் என்ன செய்வேன்!’ என்று கிருஷ்ணர் யோசித்தார். அவருக்கு ஒரு தீர்வு தோன்றியது.
கிருஷ்ணன் வெகு தந்திரசாலி!  அவருடைய இரு மனைவியரின் தோட்டங்களும் அருகருகே இருந்தன. சத்யபாமாவின் தோட்டத்தில் மரம் இருக்கும்படியும், பூக்கள் உதிரும் கிளைகள் ருக்மிணியின் தோட்டத்தில் இருக்கும்படியும் சாமர்த்தியமாகப் பாரிஜாத மரத்தை நட்டு வைத்தார். காலையில் பொழுதுவிடிந்ததும் பாரிஜாத மலர்களைச் சேகரித்தவள் ருக்மிணிதான்.
புனைவாக இருந்தாலும், எவ்வாறு சாதுர்யமாக ஒரு பிரச்னையைத் தீர்ப்பது என்பதை இந்தக் கதை விளக்குகிறது.  
தீர்க்கமுடியாத பிரச்னைகளையும், கொஞ்சம் மாற்றி யோசித்தால் சுலபமாகத் தீர்க்க முடியும்.
ஒரு சீமாட்டி தன் ஓவியத்தைப் பெரிதாக வரைந்து வீட்டில் மாட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு, பிரபல ஓவியர் ஒருவரிடம் சென்றாள். அவரும் அவளைத் தத்ரூபமாக வரைந்தார். ஆனாலும், அவளுக்குத் திருப்தி இல்லை. ''இந்த உருவம் என்னைப் போலவே இல்லை. அப்படி இருந்திருந்தால், என்னுடைய நாய் அந்த ஓவியத்தைப் பார்த்ததுமே அடையாளம் கண்டு வாலாட்டியிருக்குமே?'' என்றாள். பின்பு ஓவியர் அந்தப் படத்தில் சில நுட்பமான மாறுதல்களைச் செய்து கொடுத்து அனுப்பினார்.
ஒரு வாரம் கழித்து, அவள் மீண்டும் வந்தாள். ''என் நாய் இப்போதும் வாலாட்டவில்லை. சரியில்லாத இந்த ஓவியத்தை நான் வாங்கிக் கொள்ள மாட்டேன்'' என்று அடம் பிடித்தாள். தான் அந்த ஓவியத்தை இன்னும் மெருகேற்றி வைப்பதாகவும், மறு வாரம் வந்து பார்க்குமாறும் அந்த ஓவியர் சொன்னார்.
அதன்படி, அடுத்த வாரமும் அவள் தனது நாயோடு வந்தாள். இந்த முறை அவளின் நாய் வேக வேகமாக வாலாட்டிக்கொண்டு, ஓவியத்தின் அருகில் சென்றது; அந்தச் சட்டங்களை நக்கியது. அந்தப் பெண்மணிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. திருப்தியான திருப்தி! பேசிய தொகைக்கு மேலேயே பத்தாயிரம் ரூபாய் அதிகம் கொடுத்து, அதை வாங்கிச் சென்றாள்.  
ஓவியரின் உதவியாளர், ''இந்த ஒரு வாரத்தில் நீங்கள் ஓவியத்தில் எந்த மாற்றமும் செய்ததாக எனக்குத் தெரியவில்லையே! பின்பு எப்படி, அந்த நாய் அதைப் பார்த்து வாலாட்டியது?' என்று குழப்பத்துடன் கேட்டார்.
''நாய்க்கு வண்ணங்கள் எல்லாம் தெரியாது. அந்தச் சீமாட்டி முட்டாள்தனமாகப் பேசு கிறாள். இப்படிப்பட்டவர்களைத் தந்திரமாகத்தான் எதிர்கொள்ளவேண்டும். நான் ஓவியத்தின் சட்டத்தில் மாமிசத்தைத் தடவி வைத்திருந்தேன். அந்த மணத்துக்காகக்தான் நாய் ஓடிவந்து அந்த ஓவியத்தை நக்கியது. அதை அவள், தனது நாய் தன்னை ஓவியத்தில் அடையாளம் கண்டுகொண்டதாக எண்ணி விட்டாள்!' என்றார் ஓவியர்.
புரியாதவர்களுக்குப் புரிய வைக்க மாற்றி யோசிப்பது அவசியம்!

1 comment:

  1. சின்ன பலவீனம் ஒருவனை வீழ்த்திவிடும் - உண்மை தான்... சகுனி கணக்கு தப்புமா...?

    பிரச்னையை தீர்க்கும் சாதுர்யமான செயலின் கதையும் அருமை... அதை விட புரியாதவர்களுக்குப் புரிய வைக்கும் கதை பிரமாதம்...!

    பாராட்டுக்கள்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete